முன்னேற விழையும்
மாவட்டங்கள் திட்டம்
முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம்
112 பின்தங்கிய மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையை விரைவாக மேம்படுத்தும் நோக்கத்துடன், மாண்புமிகு இந்திய பிரதமரால் ஜனவரி 2018 ஆம் ஆண்டில் முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. மாற்றத்திற்கான வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 112 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களும் அடங்கும்.
முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் கீழ்காணும் ஆறு கருப்பொருள்களின் கீழ் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வ.எண் | கருப்பொருள் | முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் எண்ணிக்கை | கருப்பொருள் களின் பங்கு(% இல்) |
1 | சுகாதாரம் & ஊட்டச்சத்து | 13 | 30 |
2 | கல்வி | 8 | 30 |
3 | வேளாண்மை (ம) அது சார்ந்த சேவைகள் | 10 | 20 |
4 | நிதி உள்ளடக்கம் | 6 | 5 |
5 | திறன் மேம்பாடு | 5 | 5 |
6 | அடிப்படை உள்கட்டமைப்பு | 6 | 10 |
மொத்தம் | 49 | 100 |
நோக்கம்
நாடு முழுவதும் வளர்ச்சியடையாத 112 மாவட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதே முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டம் மாவட்டங்களுக்கிடையே ஒத்துழைப்பையும், போட்டித்தன்மையையும் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்துகிறது. இது மாதந்தோறும் மாவட்டங்களை தரவரிசைப்படுத்தி, வளர்ச்சிக்கான மாபெரும் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இதில், சுகாதாரம் (ம) ஊட்டச்சத்து, கல்வி, அடிப்படை உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் (ம) திறன் மேம்பாடு, வேளாண்மை (ம) அதனுடன் தொடர்புடைய பகுதிகள் ஆகிய குறிப்பிட்ட குறிகாட்டிகள் கண்காணிக்கப்படுகின்றன.
திட்ட விவரம்
மாநில திட்டக் குழு, ஒருங்கிணைக்கும் நிறுவனமாக செயல்பட்டு, நிதி ஆயோக் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு இடையேயான முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது. முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் உள்ள, மாவட்டங்களின் நிர்வாகங்கள், மாதந்தோறும் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, சேம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச் இணையதளத்தில் 6 சமூக-பொருளாதார கருப்பொருள்களின் கீழ் 49 குறிகாட்டிகளுக்கான தரவுகளைப் பதிவேற்றம் செய்து வருகின்றன. மாவட்டங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள சிறந்த மாவட்டங்களுடன் போட்டியிடவும் தேசிய அளவில் சிறந்த மாவட்டங்களாக மாறவும் ஊக்குவிக்கப்படுகின்றன.
விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களும் சீரான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அடிப்படைக் கூட்டு குறியீட்டு மதிப்பெண்களாக முறையே 45.6 மற்றும் 46.8 பெற்றிருந்தன. அவற்றுடன் ஒப்பிடும் போது, ஆகஸ்ட் 2023 நிலவரப்படி, முறையே 64.1 மற்றும் 63.6 என்ற கூட்டு குறியீட்டு மதிப்பெண்களை எட்டியுள்ளன. மேலும், 2019 (ம) 2020 ஆம் ஆண்டுகளில், வேளாண்மை மற்றும் நீர்வளத்துறையில் ராமநாதபுரம் முதல் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். விருதுநகர் 2019 ஆம் ஆண்டில் அடிப்படை உள்கட்டமைப்புக்காகவும், 2020 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறைகளுக்காகவும் விருதுகளை பெற்றுள்ளது. இம்மாவட்டங்களின் சிறந்த செயல்பாட்டுகளுக்காக ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு குழு
நிதி ஆயோக் நிறுவிய இணையதளத்தின் வாயிலாக நிகழ்நேர கண்காணிப்பும் தரவரிசையும் எளிதாக செய்யப்படுகின்றன. மாவட்டங்கள் 49 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் இலக்கை நோக்கி அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. இது மாவட்டங்களுக்கிடையே போட்டியை உருவாக்கி போட்டி கூட்டாட்சியையும் ஊக்குவிக்கிறது. இத்தரவரிசைப்படுத்துதல் என்பது ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் துறைசார் செயல்திறன்யும் உள்ளடக்கியுள்ளது.
அரசு ஆணைகள்
அரசு ஆணை எண்.104, திட்டம், வளர்ச்சி (ம) சிறப்பு முயற்சிகள்(மாதி.1),நாள்: 27.12.2017.
அரசு ஆணை எண். 42, திட்டம், வளர்ச்சி (ம) சிறப்பு முயற்சிகள்(மாதி.1), நாள்: 29.07.2020
அரசு ஆணை எண்.79, திட்டம், வளர்ச்சி (ம) சிறப்பு முயற்சிகள்(மாதி.1), நாள்:28.06.2022.
அரசு ஆணை எண். 81, திட்டம், வளர்ச்சி (ம) சிறப்பு முயற்சிகள்(மாதி.1), நாள்:13.06.2023.
PDF not availableஆகியவை முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தை செயல்படுத்தும் வழிகாட்டுதல்களை கோடிட்டுக்காட்டுகின்றன.