வளமிகு வட்டாரங்கள் திட்டம் (மலைப் பகுதிகளை உள்ளடக்கிய முன்னுரிமை வட்டாரங்கள்)

வளமிகு வட்டாரங்கள்
திட்டம்

அறிமுகம்

இந்தியாவின் பிற வளர்ச்சியடைந்த மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியின் பரவலாக்கம்  சமமாக உள்ளது. இருப்பினும் மாநிலத்தில் உள்ள  வட்டாரங்களுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக வளர்ச்சிக்கான வேறுபட்ட தேவைகள் எழுந்துள்ளன.

மாநிலம் முழுவதிலும் இருக்கின்ற வளர்ச்சி தேவையானது, வட்டார அளவிலான சமூகபொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வளங்களில் காணப்படும்  வேறுபாடுகளின் காரணமாக மாறுபட்டு காணப்படுகிறது.

வளர்ச்சி அதிக அளவில் தேவைப்படும் பகுதிகள் / வட்டாரங்களில், அடிப்படை மக்கள் சேவைகள் மற்றும் அதற்குரிய அமைப்புகள் தொடர்பான,  அரசு செலவினங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. குறிப்பிட்ட வட்டாரங்களில் பொதுச் செலவினங்களில்இடம் சார்ந்த இலக்குகள் நிர்ணயித்து செயல்படுவது, வட்டாரம் முழுவதும் சமமான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்குரிய ஒரு முறையான அணுகுமுறையாகும்.

மாண்புமிகு நிதியமைச்சர் 2023-2024-ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில், வட்டாரங்களின் வளர்ச்சிக்காக, 50 வளமிகு வட்டாரங்கள் திட்டத்தை (மலைப் பகுதிகளை உள்ளடக்கிய முன்னுரிமை வட்டாரங்கள் திட்டம்) அறிவித்தார்.

2023-2024 ஆம் நிதியாண்டில் 50 வளமிகு வட்டாரங்கள் திட்டத்தை (மலைப் பகுதிகளை உள்ளடக்கிய முன்னுரிமை வட்டாரங்கள்) செயல்படுத்துவதற்கு அரசு ரூ.100 கோடியை ஒப்பளித்துள்ளது. ஒரு வட்டாரத்திற்கு மூன்றாண்டு காலத்திற்கான மொத்த ஒதுக்கீடு  சுமார்  ரூ. 5 கோடி ஆகும்

தமிழ்நாட்டில் இத்திட்டமானது, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழுவால் செயல்படுத்தப்படுகிறது.

நோக்கங்கள்

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், பொதுப் பயன்பாடுகள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள துறை சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைத்து, கூடுதலாக அரசு உதவி தேவைப்படும் வட்டாரங்களைக் கண்டறிவதாகும்.

வளர்ச்சிக்கான வளங்களை பெருக்குவதற்கு வட்டார அளவிலான நிர்வாகங்களில், திறனை உருவாக்குவதும், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது விரைவான வளர்ச்சியை அடைய அவற்றை திறம்பட பயன்படுத்துவதும் இத்திட்டத்தின் இரண்டாம் நோக்கமாகும்.

அரசு ஆணைகள்

மாநில திட்டக்குழு, இத்திட்டத்திற்காக 50 பின்தங்கிய வட்டாரங்களை கண்டறிந்துள்ளது; மேலும் திட்டத்தைச்  செயல்படுத்தப்படுவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறையையும் உருவாக்கியுள்ளது. இத்திட்டம் தொட்பான அரசு ஆணை எதிர்நோக்கப்படுகிறது.