கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல சமூக நீதி நடவடிக்கைகளுள், பாலின சமத்துவம் ஒர் முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மனித மேம்பாட்டு அறிக்கை (2017), பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் மாநிலங்களில் ஒன்றாக நமது மாநிலம் திகழ்கிறது என்பதை எடுத்துரைக்கிறது. எனினும், கோவிட்-19 பெருந்தொற்று அனைத்து நிலையிலுள்ள பெண்களையும் பாதித்துள்ளது, குறிப்பாக வாழ்வாதார இழப்பு காரணமாக முறைசாரா தொழிலடிப்படையிலான பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், தமிழ்நாடு அரசால் 2021 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டமான விடியல் பயணத்திட்டத்தில், அரச சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண் பயணிகள் பயணிப்பதற்கான கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் பெண் பயணிகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு, மாநிலத் திட்டக்குழு இரு கட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது. முதற்கட்ட ஆய்வு சென்னை மாநகர பகுதியிலும், இரண்டாம் கட்ட ஆய்வு மூன்று நகர்ப்புற மையமுனைகளிலும் (நாகை, மதுரை மற்றும் திருப்பூர்) மேற்கொள்ளப்பட்டன. பெண் பயணிகளின் வயது, சமூகப்பிரிவு, கல்வித்தகுதி, வருவாய், சராசரி சேமிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.