முன்னேற விழையும்
வட்டாரங்கள் திட்டம்
அறிமுகம்
முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அரசு அத்திட்டத்தின் மாதிரியை வட்டார அளவில் விரிவுபடுத்த முடிவு செய்தது. மிகவும் பின்தங்கிய வட்டாரங்களின் வளர்ச்சியை விரைவுப் படுத்துவதையும், நாடு முழுவதும் வளர்ச்சியடையாத 500 வட்டாரங்களில், சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு, 2023 ஆம் ஆண்டு சனவரி 7-ஆம் தேதி மாண்புமிகு பிரதமர் அவர்களால் முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பின்தங்கிய வளர்ச்சியுடைய 16 வட்டாரங்கள், நிதி ஆயோக்கால் முன்னேற விழையும் வட்டாரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (KPIs) ஐந்து கருப்பொருள்களின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன:
வ.எண் | கருப்பொருள்கள் | முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளின் எண்ணிக்கை | கருப்பொருள் முக்கியத்துவம் (% இல்) |
1 | சுகாதாரம் (ம) ஊட்டச்சத்து | 14 | 30 |
2 | கல்வி | 11 | 30 |
3 | வேளாண்மை (ம) அது சார்ந்த சேவைகள் | 5 | 20 |
4 | அடிப்படை உள்கட்டமைப்பு | 5 | 15 |
5 | சமூக மேம்பாடு | 4 | 5 |
மொத்தம் | 39 | 100 |
தமிழ்நாட்டில் உள்ள முன்னேற விழையும் வட்டாரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
வ.எண் | மாவட்டம் | வட்டாரம் |
1 | அரியலூர் | ஆண்டிமடம் |
2 | கள்ளக்குறிச்சி | கல்வராயன் மலை |
3 | கரூர் | தோகைமலை |
4 | பெரம்பலூர் | ஆலத்தூர் |
5 | புதுக்கோட்டை | திருவரங்குளம் |
6 | இராமநாதபுரம் | திருவாடானை |
7 | ராணிப்பேட்டை | திமிரி |
8 | சிவகங்கை | திருப்பத்தூர் |
9 | நீலகிரி | கோத்தகிரி |
10 | தென்காசி | மேலநீலிதநல்லூர் |
11 | திருவண்ணாமலை | ஜவ்வாது மலை |
12 | திருச்சிராப்பள்ளி | துறையூர் |
13 | திருநெல்வேலி | நாங்குநேரி |
14 | வேலூர் | கே.வி.குப்பம் |
15 | விழுப்புரம் | திருவெண்ணைநல்லூர் |
16 | விருதுநகர் | திருச்சுழி |
குறிக்கோள்
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 வட்டாரங்களில், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, குடிநீர், வேளாண்மை (ம) அது சார்ந்த சேவைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து கருப்பொருள்களின் கீழ் உள்ள இன்றியமையாத அரசுசேவைகளை முற்றிலும் நிறைவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திட்டவிவரம்
ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி (ம) உள்ளாட்சிகள் (பயிற்சி) நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, மாநில திட்டக்குழு ஏற்பாடு செய்த மாநில அளவிலான கூட்டத்தில், வட்டார வளர்ச்சி உத்திகளைத் தயாரிப்பதற்கான செயல்பாடுகள் நடைபெற்றன. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 (ம) 27 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும், வட்டார வளர்ச்சி உத்திகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. பின்னர், ஒவ்வொரு வட்டாரத்திற்கும், வட்டார வளர்ச்சி உத்திகள் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதலுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
செப்டம்பர் 30, 2023 அன்று முன்னேற விழையும் வட்டாரங்கள் திட்டம் தொடர்பான உறுதிமொழி வாரம், புது தில்லியில் மாண்புமிகு பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 முன்னேற விழையும் வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் உறுதிமொழி வார நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
16 முன்னேற விழையும் வட்டாரங்களிலும் இத்திட்டத்திற்கான பணியாளர்களைப் பணியமர்த்தும் பணியும், அவர்களுக்கு மின்னணு சாதனங்கள் வாங்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.
மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலர் இத்திட்டத்திற்கான மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு குழு
தமிழகத்தில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணித்திட மாநில திட்டக்குழு ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயல்படுகிறது.
அரசு ஆணைகள்
திட்டம் (ம) வளர்ச்சித்துறை கடிதம் எண்.2465/SDG/2022, தேதி: 16.08.2023 இன் படி, மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலர் இத்திட்டத்திற்கான மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.