மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி
அறிமுகம்
மிகவும் பின்தங்கிய 100 வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக, மாண்புமிகு நிதி அமைச்சர் 2012-2013 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட உரையின் போது, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம். சுகாதாரம், கல்வி. பாலினம், தனிநபர் வருமானம், வறுமை மற்றும் வேலையின்மை போன்ற குறிகாட்டிகளின் அடிப்படையில் வட்டார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டது.
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட 747 தனிப்பட்ட திட்டங்ககளுக்கான துறை வாரியான ஒதுக்கீடு பின்வருமாறு:
துறை | திட்டங்களின் எண்ணிக்கை | திட்டச்செலவு (ரூ. கோடியில்) | மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி பங்களிப்பு (ரூ. கோடியில்) |
கல்வி | 91 | 82.81 | 82.24 |
வேலைவாய்ப்பு | 118 | 57.94 | 42.34 |
பாலினம் | 66 | 50.99 | 46.22 |
சுகாதாரம் | 218 | 228.00 | 226.53 |
வருமானம் | 147 | 102.59 | 77.01 |
வறுமை | 107 | 74.32 | 61.54 |
மொத்தம் | 747 | 596.64 | 535.88 |
இந்த திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 535.88 கோடி ஆகும்.
நோக்கங்கள்
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம். முக்கிய சமூக,பொருளாதார வளர்ச்சி குறிகாட்டிகளில், வட்டார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI) மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்துவதாகும்.
இத்திட்டத்தின் இரண்டாவது நோக்கம், மாவட்ட மற்றும் வட்டார அளவில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி அடையும் நோக்கில் மனித வளர்ச்சி நிலையை கண்காணிக்கும் திறனை மாவட்டங்களில் உருவாக்குவதாகும்.
திட்டவிவரம்
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்திற்கு 2012-13 ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 98% நிதி, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கும் 2% நிதி நிர்வாகச் செலவினங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு (2020-21 மற்றும் 2021-22), ஆண்டு ஒதுக்கீடாக ரூ. 50 கோடி வழங்கப்பட்டது. மாநில சமச்சீர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மாதாந்திர முன்னேற்ற அறிக்கை, முதலமைச்சரின் இணையதளத்தில் (CM Dashboard) பதிவேற்றம் செய்வதற்காக TNEGA-வுக்கு மாதந்தோறும் அனுப்பப்படுகிறது. மேலும், அவ்வறிக்கை முதலமைச்சரின் இணையதளத்தில் TNEGA ஆல் மாதந்தோறும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
கண்காணிப்புக் குழு
மாநில அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இக்குழு, அரசாணை எண் 98, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் (மா தி கு) துறை,தேதி: 08.10.2013 வாயிலாக நிறுவப்பட்டது.
வட்டாரங்கள் / வார்டுகளுக்கான முன்னோக்கு திட்டங்களுக்கும் ஆண்டு செயல் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிப்பதிலும், தனிப்பட்ட திட்டங்களுக்கு ஒப்பளிப்பளிப்பு வழங்குவதிலும் இந்தக் குழு முக்கிய பங்காற்றுகிறது. மேலும், இக்குழு ஒரு வழிகாட்டுதல் குழுவாகவும் செயல்பட்டு, திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மேற்பார்வையும், சீராய்வும் மதிப்பீடும் செய்கிறது.
அரசு ஆணைகள்
அரசாணை எண்.13, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் (மாதிகு) துறை, நாள்:07.02.2013
அரசாணை எண்.83, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் (மாதிகு) துறை, நாள்:29.08.2013,
அரசாணை எண்.98, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் (மாதிகு) துறை, நாள்:08.10.2013
அரசாணை எண்.68, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் (மாதிகு) துறை, நாள்:26.08.2015